மலையகத்தில் மேலும் 3000 ஆசிரியர்கள் நியமனம் வழங்க நடவடிக்கை

 06/18/2017 - 14:16
12 reads

மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு திறமையான ஆசிரியர்கள் 3000 பேரை உளவாங்குவதற்கான அனுமதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ வழங்கியுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டு அதன் மூலமாக ஆசிரியர்கள் உள்வாங்கப்பட உள்ளனர் என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கண்டி கெங்கல்லை தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8 வகுப்பறைகளை கொண்ட இரண்டு மாடிக்கட்டடிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த கட்டடம் அமைப்பதற்கான  முழுமையான நிதியை கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் வழங்கியிருந்ததுடன். அதற்கான மூன்றாவது மாடியையும் அமைத்து தருவதற்கும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்

கல்வி அபிவிருத்திக்காக அரசாங்கம் பல்வேறு உதவி செய்து வருகின்றது. அதே நேரத்தில் கண்டி தமிழ் வர்த்தகர் சங்கத்தைப் போல் வெளி மாவட்டங்களிலும் இருக்கின்ற வர்த்தகர்களும் இவ்வாறான உதவிகளை கல்வித்துறைக்கு செய்தால் எமது கல்வித்துறை மிகவும் வேகமாக வளர்ச்சியடைய முடியும். இது ஒரு சமூக உயர்வுடன் செய்யப்படுகின்ற ஒரு செயற்பாடாகவே நான் கருதுகின்றேன். அவர்களுக்கு எனது அரசாங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று அரசாங்கம் கல்வித்துறையை அபிவிருத்தி செய்வதற்கு அதிக நிதியை ஒதுக்குகின்றது. அதற்கு இவ்வாறான பொது அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குகின்ற பொழுது இன்னும் அதிகமான வேலைகளை செய்ய முடியும். என்னைப் பொறுத்த வரையில் இந்த நிகழ்ச்சியில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க¸ அதே போல மத்திய மாகாண கல்வி¸ விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகிய நாங்கள் அனைவரும் இணைந்து இந்த கட்டிடத்தை திறந்து வைத்ததன் மூலமாக ஒரு செய்தியை கூறியிருக்கின்றோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்கின்றோம் என்று. எங்களுக்கு தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் இருக்கலாம். அதனை நாங்கள் தனியாக பார்த்துக் கொள்ள வேண்டும். பொது வேலை என்று வருகின்ற பொழுது அதுவும் குறிப்பாக கல்வி என்று வருகின்ற பொழுது நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே நாம் ஒற்றுமையாக செயற்பட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கல்வி அபிவிருத்தி தொடர்பாக நாம் அனைவரும் ஒற்றுமையா செயற்படாவிட்டால் அது எமது சமூகத்தையே பாதிக்கும்.இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

யார் ஆட்சி செய்தாலும் எமக்கு அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களிடம் இருந்து எமது சமூகத்திற்கான அனைத்து தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுடன் இணைந்திர்ப்பவர்களின் கரங்களிலேயே தங்கியிருக்கின்றது. அந்த வகையிலேயே நான் அன்மையில் பிரதமரை சந்தித்த பொழுது அவர் என்னிடம் கேட்டார். உங்களுடைய மலையக பாடசாலைகளின் அபிவிருத்தி எப்படி இருக்கின்றது என்று. அதற்கு நான் அவரிடம் கூறினேன் எங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறையே பெரும் பிரச்சினையாக இருக்கின்றது என்று. அதற்கு அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டார் இது தொடர்பாக கலந்துரையாடி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 28.06.2017 அன்று இது தொடர்பான விசேட கலந்தரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன் பின்பு வர்த்தமாணி அறிவித்தலின் ஊடாக ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த முறை ஆசிரியர்களை உள்வாங்குவது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தலில் விடப்பட்ட தவறுகள் இம்முறை தவிர்க்கப்படும். உதாரணமாக கடந்த முறை 10 வருட பதிவு கோரப்பட்டது. அதனை இந்த முறை 5 ஆக குறைக்கலாம் என தீர்மானித்திருக்கின்றேன். அது மட்டுமல்லாமல் பெருந்தோட்டங்கள் என்று குறிப்பிட்ட காரணத்தால் நகர்பறங்களை சேர்ந்த பல திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனவே அவ்வாறான விடயங்கள் நீக்கப்பட வேண்டும். நகர்புறங்களை அன்டி வாழ்கின்றவர்களும் இந்திய வம்சாவளி தமிழர்களே. எனவே அவர்களையும் உள்வாங்குவதற்கு ஏற்ற வகையில் பாடசாலைகளை மையப்படுத்தியதாக இந்த நியமனங்கள் அமையும் அதே போல் இந்த நியமனதில் கல்வியற் கல்லூரிகளுக்கு விண்ணபித்து அனுமதி கிடைக்காதவர்கள¸; பல்கலைகலகத்திற்கு சொற்ப புள்ளிகள் இன்மையால் கிடைக்காதவர்கள்¸ பல்கலைகழகம் கிடைத்தும் அதனை தொடராதாவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும். இந்த நியமனங்கள் பாடசாலைவாரியாக பாடங்களை அடிப்படையாக கொண்டு வழங்கபடும். நேர்முக பரீட்சையில் மிகவும் திறமையான பல தகமைகள் கொண்டவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.