துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தில் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்கள் குறித்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைத்து திலகர் எம்.பி. உரை

 04/09/2017 - 09:30
1836 reads

துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது ஆற்றுப்படுக்கை அகலமானதையடுத்து வீடுகள், காணிகளை சொத்துக்களை இழந்தோருக்கு நட்டஈடாக பெருந்தோட்டக்காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 

இதனால் பெருந்தோட்டங்கள் பல மூடப்பட்டதுடன் குறித்த தோட்டத்தில் பாரம்பரியமாக தொழில் செய்த தொழிலாளர்கள் தொழிலை இழந்தததுடன் அவர்கள் லயன் அறைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நிலைமையே காணப்படுகின்றது. 

எனவே குறித்த தோட்டத் தொழிலாளர்கள் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினால் முற்றுமுழுதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். கண்டி மாவட்டத்தின் திகன பிரதேசத்திலும்  நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேசத்திலும் இவ்வாறு பாதிக்கப்பட்டத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பயிர்ச்செய்கைக்கும் வீடமைப்புக்கும் போதுமான காணிகள் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைத்துள்ளார். 

குறித்த பிரேரணையில் கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட திஸ்பன இலக்கம் 1 மொச்சகொட்ட மற்றும் கட்டுக்கல்ல தோட்ட மக்களின் 33 வருடகால பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவரது உரையின் சுருக்கமான விபரம் வருமாறு:
‘கொத்மலை, திஸ்பன கொடமடித்த மற்றும் கட்டுகல கிராம சேவகர் பிரிவுகளுக்கு கீழ் அடங்கும் மொச்சக்கொட்டை மற்றும் கட்டுக்கல்ல ஆகிய தோட்டங்கள் மக்கள் பெருந்தொட்ட அபிவிருத்தி சபையினால் நிர்வகிக்கப்பட்ட தோட்டங்கள். 

துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்போது கண்டி மாவட்டத்தின் ஒரு பகுதியும் நுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதியுமாக மகாவலி ஆற்றுப்படுக்கை அகலமாகி நீரில் மூழ்கியதன் காரணமாக உடமைகளை இழந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 
1992 ஆம் ஆண்டு தோட்டங்கள் தனியார் மயப்படுத்தும் வரையான காலப்பகுதிவரை மேற்படி தோட்டங்கள் ஒரு பகுதி மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையினால் நிர்வகிக்கப்பட்டதனால் தொழிலாளர்களுக்கு ஓரளவு தொழில் வாய்ப்பு கிடைத்தது. 

எனினும் 1992 ஆம் ஆண்டு மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்கு கீழ் இயங்கிய தோட்டங்கள் பிராந்திய கம்பனிகளுக்கு பொறுப்பளிக்கப்பட்டதன் பின்னர் மேற்படி தோட்டங்களை நிர்வகிப்பதை JEDB கைவிட்டது. 

இதற்கு பிறகு நிரந்தர தொழிலை இழந்த தோட்ட மக்கள் தமக்கும் காணிகள் பகிரந்தளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதற்காக ஹரங்கல தோட்டம் அடையாளம் காணப்பட்டதோடு அவற்றை பகிரந்தளிப்பதில் இழுத்தடிப்பு செய்யப்பட்டது. அதேபோல மீதமாக இருந்த மொச்சகொட்டை, கட்டுகல தோட்டக்காணிகளையும் ஏற்கனவே காணிகளை பெற்றுக்கொண்டோர் அபகரித்துக்கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் மேற்படி தோட்டத்தில் பாரம்பரியமாக தொழில் செய்து வாழ்ந்த 34 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் தொழிலுமின்றி காணிகளும் இன்றி தாங்கள் வாழும் லயங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு அன்றாடம் ஏதேனும் தொழில் செய்து வாழும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பத்திரங்களை பல தரப்பினருக்கும சமர்ப்பித்து வந்துள்ளனர். 

இதன் பயனாக 2011 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை இவர்களக்கு தலா இருபது பேர்ச்சஸ் காணியை வழங்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டபோதும் இன்று வரை அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. தற்போது அந்த மக்களின் பிரச்சினை 33 வருடங்களைக் கடந்தும் உரிய தீர்வின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது. 
மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்றவகையில் என்னிடம் இந்தப் பிரச்சினை கொண்டுவரப்பட்ட நிலையில் இந்தத் தொழிலாளர் குடும்பங்கள் வாழ்ந்த பிரதேசத்துக்கு சென்று பார்வையிட்டேன். 

மூன்று லயங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் அவர்களது வாழ்க்கை மிகுந்த பரிதாபத்துக்குரியது. லயன் அறையில் அவர்கள் வாழ அவர்களது மலசலகூடம் அமைந்துள்ள காணியும் மாட்டுக்கொட்டிலும் மற்றையவர்களுக்கு பகிரந்தளிக்கபட்டுள்ளது. 

லயத்துக்கூரையில் வடியும் தண்ணீர் மற்றவர் காணியில் வீழ்கிறது எனும் பிரச்சினையை அங்கே நேரிலேயே கண்டேன். 

தவிரவும் தங்களது லயன் வீடுகளுக்கு குறைந்த பட்சம் மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்க என்னிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘செமட்ட எலிய’ திட்டத்தில் பெற்றுகொடுக்க ஏற்பாடு செய்தேன். 

அதில் தோட்டத் துரை கையொப்பம் இட்டு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்த நிலையில் அப்படியொரு தோட்ட நிர்வாகம் என்பதையும் எடுத்துக்கூறி பெருந்தோட்டப்பகுதிகளில் இந்த மின்சார வசதி பெற தோட்டத் துறை அனுமதி தேவையில்லை என்கிற நிலைப்பாட்டையும் அமைச்சு மட்டத்தில் பெற்றுக்கொடுத்து கிராம சேவகர் உறுதிப்படுத்தலுடன் மின்சார வசதி பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. 

இப்போது மகாவலி அபிவிருத்திக்கான பிரதியமைச்சராக செயற்படும் அமைச்சர் கண்டி மாவட்ட உறுப்பினர். கொத்மலைக்கு அருகாமையில் வசிப்பவர். நான் எடுத்துக்கூறும் இடங்களையும் பிரச்சினைகளையும் நன்கு அறிந்திருப்பவர். அவர் சபைக்கு சமூகம் அளித்து எனது பிரேரணைக்கு பதில் அளிப்பவர் என்ற வகையில் கடந்த  33 வருடகாலமாக உரிய நிவாரணம் இன்றி தவிக்கும் இந்த மக்களுக்கு குநை;த பட்சம் ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்கி ஏனையோருக்கு வழங்கப்பட்டது போன்று நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் அந்த மக்களின் கோரிக்கை அவர்களின் பிரதிநிதி என்றவகையில் இந்த உயரிய சபையில் முன்வைக்கிறேன் எனவும்  தெரிவித்தார். 

மகாவலி அபிவிருத்தித் திட்டம்
Mahaweli Project
எம்.திலகராஜ்
M.Thilakraj
Upcountry People
Parliament