இனசுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை - மியன்மார் தூதுவர்

 09/26/2017 - 18:16
5 reads

மியன்மாரில் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன சுத்திகரிப்பு  நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என, மியன்மாருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் ஹவ் டூ சூன் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்றைய தினம் கலந்துகொண்ட அவர், ஐக்கிய நாடுகள் சபையின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், மியன்மாரிலுள்ள ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்போ, படுகொலையோ அல்லது அவர்களை துன்புறுத்தும் செயற்பாடுகளோ முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

எனினும் ராகைன் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்கள் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதும் அப்பாவி மக்களை பாதுகாப்பதுமே பொறுப்புவாய்ந்த அரசாங்கத்தின் முக்கிய பணியாகும் என தெரவித்துள்ள அவர், மனித உரிமைகள், சுதந்திரம் உள்ளிட்ட கொள்கைகளுக்காக போராடும் மியன்மார் தலைவர்கள், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

[இனசுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை - மியன்மார் தூதுவர்]

அத்துடன், மியன்மாரில் இன சுத்திகரிப்போ அல்லது இன அழிப்போ இடம்பெற்றால், அவற்றை தடுப்பதற்குரிய அனைத்து விதமான நடவடிக்கையையும் நாம் முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதியிலிருந்து ரொஹிஙயா முஸ்லிம்கள் மீது அந்நாடடு இராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் மியன்மார் அரசாங்கம் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது.

இந்த நிலையில் குறித்த மோதல்களினால் இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள், போதுமானளவு அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதுடன் பல்வேறு வகையான தொற்று நோய்களுக்கு குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

news24.lk
News24
sri lanka news 24
24 news