மீத்தேன் திட்டத்தை கைவிடாவிட்டால் புரட்சிக்கர போராட்டம் நடத்தப்படும்: சீமான்

 06/13/2017 - 13:38
1 read

மீத்தேன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவில்லை என்றால் புரட்சிக்கர போராட்டம் ஆரம்பிக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை விரட்டிய பொலிஸாரை கண்டித்தும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாகை மாவட்டத்தில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் மட்டுமே மீத்தேன் திட்டத்தை செயற்படுத்துவோம் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் கதிராமங்கலத்தில் மக்கள் கருத்துக்களை கேட்காமல் பொலிஸாரின் பாதுகாப்புடன் மீத்தேன் திட்ட பணிகள் நடைபெறுகிறது.

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். எனவே மீத்தேன் திட்டத்தில் தமிழக அரசின் செயற்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும்.

மீத்தேன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவில்லை என்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று இனிவரும் காலங்களில் புரட்சிக்கர போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.